வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இனி ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது
நாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டன. அதன் பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இதனால், விமான நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டன. கொரோனா பரிசோதனை, முகக்கவசம், சமூக இடைவெளி ஆகியவை பின்பற்றப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக சீனா உட்பட பிற நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில் சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், கொரியா, ஜப்பான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இனி ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனா பரவல் குறையத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.