வைரத்தின் தேவை குறைந்து வருவதால், சுமார் 20,000 தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வைரத்தின் தேவை பெருமளவில் குறைந்து வருவதால், அதனை சார்ந்துள்ள தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெட்டி எடுக்கப்டும் வைரமானது ஏற்ற வடிவத்திற்கேற்றாற்போல் வெட்டப்பட்டு, மெருகூட்டப்பட்டு அதன் பிறகு விற்பனைக்கு வரும். ஆனால், அப்படி மெருகூட்டப்படும் வைரங்களின் தேவை பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், கடந்த ஒரு மாதத்தில் சூரத்தில் சுமார் 20,000 பேர் வேலை இழந்துள்ளனர் என்று தி எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான இந்தியாவின் வைர ஏற்றுமதி, அதன் முந்தைய ஆண்டை விட 5.43% குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரத்தில் உள்ள வைரத்தை பாலிஷ் மற்றும் வடிவமைக்கும் அனைத்து தொழிற்சாலைகளிலும் சேர்த்து சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.