ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் மங்களேஸ்வர் – ரஞ்சிதா தம்பதி. இவர்கள், கேரள மாநிலம் கோட்டயத்தில் ஒரு மீன் பண்ணையில் பணிபுரிந்து வருகின்றனர். ஜனவரி 29ஆம் தேதியன்று பிரவத்திற்காக வீடு திரும்பும்போது, வழியிலேயே ரஞ்சிதாவுக்கு வலி ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் எர்ணாகுளம் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து, குழந்தைக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டதால், மருத்துவர்கள் அருகில் இருந்து லூர்து மருத்துவமனையில் NICU-க்கு மாற்றியுள்ளனர். ரஞ்சிதா பொது மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரது கணவர் இருவரையும் மாறி மாறி மருத்துவமனைக்குச் சென்று பார்த்து வந்துள்ளார். இதற்கிடையே, ரஞ்சிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், குழந்தைக்கு NICU-வில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால், மங்களேஸ்வர் – ரஞ்சிதா தம்பதியினர் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை அந்த பிஞ்சு குழந்தையை யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் அங்கேயே விட்டுவிட்டு தங்களது சொந்த ஊருக்கு கடந்த 31ஆம் தேதி திரும்பியுள்ளனர். தாய்ப்பால் கொடுக்க அம்மா இல்லை.. அன்பும், அரவணைப்பும் கொடுக்க அப்பா இல்லாத நிலையில், அந்த குழந்தை அனாதையாக தவித்து வந்துள்ளது.
இதனை கவனித்த மருத்துவர்கள், பெற்றோரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், தாங்கள் இருவரும் ஜார்க்கண்ட் திரும்பிவிட்டதாக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். இதனால், மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “குழந்தைக்கு இன்னும் ஒரு மாத காலம் சிகிச்சை தேவைப்படுவதாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அந்த குழந்தைக்கு “ரஞ்சிதாவின் குழந்தை” என்று பெயரிட்டுள்ள மருத்துவர்கள், குழந்தையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். குழந்தை நலமானதும் கண்டிப்பாக பெற்றோர் குழந்தையைத் தேடி வருவார்கள்” என்றும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.