ஆன்லைன் பணப்பரிவர்த்தனையில் புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில், RTGS (ரியல் டைம் கிராஸ் செட்டில்மென்ட்), NEFT (தேசிய மின்னணு நிதி பரிமாற்றம்) மற்றும் UPI (ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம்) ஆகியவை பெரிய அளவில் பணம் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் மேம்பட்ட தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் சிக்கலான வயரிங் நெட்வொர்க்குகளை நம்பியுள்ளன. இயற்கை பேரிடர் மற்றும் போர் போன்ற பேரழிவு நிகழ்வுகளில், இந்த அமைப்புகளை தற்காலிகமாக மூடலாம் என ரிசர்வ் வங்கி தனது ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.
விபரீதமான எதிர்பார்க்கப்படாத நிகழ்வுகளுக்காக தயாராக இருப்பது விவேகமானது,” என்று ரிசர்வ் வங்கி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதை மனதில் வைத்து, ரிசர்வ் வங்கி (RBI), LPSS -இன் செயல்பாட்டில் இறங்கியுள்ளது. இந்த புதிய கட்டண முறை எந்த நிலையிலும் செயல்படும் திறன் கொண்டதாக இருக்கும். அதாவது, இயற்கை சீற்றங்கள், போர் போன்ற பேரழிவு நிகழ்வுகளின் போதும் முக்கியமான பரிவர்த்தனைகளுக்கு இந்த அமைப்பு பயனுள்ளதாக இருக்கும். முன்மொழியப்பட்ட ‘லைட் வெயிட் மற்றும் போர்ட்டபிள் பேமென்ட் சிஸ்டம்’ (LPSS) பாரம்பரிய தொழில்நுட்பங்களிலிருந்து வேறுபட்டதாக இருக்கும் என மத்திய வங்கியின் அறிக்கை கூறியுள்ளது. மேலும் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களால் எங்கிருந்து வேண்டுமானாலும் இதை இயக்க முடியும்.