விவகாரத்து பெற விரும்பினால் 6 மாத கட்டாய காத்திருப்பு தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் கடந்த 7 ஆண்டுகளாக நீடித்த விவாகரத்து வழக்கில் நீதிபதிகள் இந்த பரபரப்பு தீர்ப்பை அறிவித்தனர். விவாகரத்து பெற 6 மாத காத்திருப்பு அவசியம் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு கட்டாய காத்திருப்புக்கு எதிராக ஷில்பா சைலேஷ் – வருண் தம்பதியினர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்தியாவில், விவாகரத்து பெற விரும்பும் தம்பதி, குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி, விவாகரத்து பெற 6 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று இந்து திருமணச் சட்டம் 13பி சட்டப்பிரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், தம்பதியில் ஒருவர் சம்மதம் தெரிவிக்காவிட்டால், விவாகரத்து கிடைப்பதில் சிக்கலும் தாமதமும் உண்டாகிறது.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமண உறவு மேம்பட வழியில்லாத, மீண்டும் சேர்ந்து வாழவே முடியாது என்ற நிலையில் உள்ள தம்பதியினருக்கு சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உடனடியாக விவகாரத்து வழங்க முடியும் என்றும், அவர்கள் விவகாரத்திற்காக 6 மாத காத்திருப்பு அவசியமில்லை எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.