வீட்டு வசதி வாரியம் பொதுமக்களின் வசதிக்காக அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தடையின்மை சான்றிதழ் (No Objection Certificate- NOC) என்றால் என்ன? ஒருவர் ஒரு செயலை நிறைவேற்ற முனையும்போது, அந்த செயலுக்கு தொடர்புடைய நபர் அல்லது நிறுவனம், அச்செயலை அந்நபர் நிறைவேற்றிக் கொள்ள தனக்கு தடை ஏதும் இல்லை என்று சான்றிதழ் அளிப்பதாகும். இது சட்டப்பூர்வமான சான்றிதழ் ஆகும்.
பொதுவாக, அடுக்குமாடி குடியிருப்பு வாங்க ஆர்வம் காட்டுவோர், நில உரிமை பத்திரம், திட்ட அனுமதி வரைபடத்தின் அடிப்படையில்தான் கட்டுகிறார்களா? சிஎம்டிஏ அனுமதி உள்ளதா? என்பதை பார்க்க வேண்டும். அதேபோல், திட்ட அனுமதியின்படி பணிகள் முறையாக முடிந்ததற்கான சான்றிதழ் இருக்கிறதா? குடியிருக்க போகும் அடுக்குமாடி கட்டடம் பாதுகாப்பானதா? தீயணைப்பு துறை தரும் தடையின்மை சான்று இருக்கிறதா? என்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
அதாவது, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு திட்டங்களில் நிலம், வீடு வாங்கியவர்கள், அதை வேறு பயன்பாட்டுக்கு மாற்ற நினைத்தால், அதற்கு வாரியத்திடம் தடையின்மை சான்றிதழ்களை பெற வேண்டும். வாரிய திட்டத்துக்கு கையகப்படுத்திய நிலங்களில், அதன் உரிமையாளர்கள் வீடு கட்ட வேண்டும் என்றாலும் கூட, இந்த சான்றிதழ்களை வாங்க வேண்டும்.
இந்த தடையின்மை சான்றிதழை பெற வேண்டுமானால், கோட்ட அலுவலகங்களில் விண்ணப்பிக்கும் நிலைமை மட்டுமே இதுநாள் வரை நடைமுறையில் இருந்து வந்தது. இந்நிலையில், இதில் சில முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்ததை அடுத்து, இதற்காகவே, ஆன்லைன் வசதி துவங்கப்பட்டுள்ளது. அதன்படி, apply.tnhb-noc.com என்ற இணையதளம் மூலம் தங்களுடைய விவரங்களை பதிவு செய்து, தடையின்மை சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.