ஒடிசாவின் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நடந்த 3 ரயில் விபத்துக்களில் உயிரிந்தவர்களில் உரிமை கோரப்படாத 28 உடல்களை புவனேஸ்வர் மாநகராட்சி நிர்வாகம் தகனம் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து புவனேஸ்வர் மாநகராட்சி மேயர் சுலோச்சனா தாஸ் கூறுகையில், “ரயில் விபத்தில் இறந்து உரிமை கோரப்படாதவர்களின் உடல்களைத் தகனம் செய்யும் பணி செவ்வாய்க்கிழமை மாலையில் தொடங்கியது. அனைத்துப் பணிகளும் புதன்கிழமை காலை 8 மணிக்கு நிறைவடைந்தது. பெண் தன்னார்வலர்கள் தாமாக முன்வந்து இறுதிச்சடங்கு செய்தனர். இறந்தவர்கள் என்ன மதம், ஆணா, பெண்ணா என்பது கூட அந்தப் பெண்களுக்குத் தெரியாது. உடல்கள் 4 மாதங்களுக்கும் மேலாக பாதுகாப்பட்டப்படு வந்ததால் அவை ஐஸ்கட்டிபோல மாறியிருந்தன. அனைத்து உடல்களும் புவனேஸ்வர் மாநகராட்சியால், புவனேஸ்வர் தகன மையத்தில் தகனம் செய்யப்பட்டன.
முதல் 3 உடல்களுக்கு இறுதிச் சடங்கு செய்த மதுஸ்மிதா பிரஸ்டி, ஸ்மிதா மோகன்தி, ஸ்வகதிகா ராவ் ஆகியோர் கூறுகையில், “அடையாளம் தெரியாத உடல்களுக்கு இந்த புனிதமான காரியத்தைச் செய்ய எங்கள் சொந்த விருப்பத்தின் பெயரிலேயே முன்வந்தோம். ஒரு வேலை முந்தைய பிறப்புகளில் அவர்கள் எங்கள் சொந்தக்காரர்களாவும் இருந்திருக்கலாம்” என்று கூறினர்.
ஸ்வகதிகா ராவ் கூறுகையில், “இறந்தவர்கள் ஆணா பெண்ணா என்று அடையாளம் கூட காணமுடியாத அளவுக்கு உடல்கள் இருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் மனிதர்கள். அவர்களுக்கு அனைத்து மரியாதைகளுடனும் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன” என்றார். இறந்தவர்களின் எலும்புகளைச் சேகரித்து அதனை நீரில் கரைக்கும் பணியினை என்ஜிஓ ஒன்று ஏற்றுக்கொண்டிருந்தது.
பலசோர் மாவட்டம் பாஹாநகா பஜார் அருகே கடந்த ஜூன் 2ஆம் தேதி நடந்த 3 ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் இறந்தவர்களில் உரிமை கோரப்படாத உடல்கள் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த உடல்களை விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகளின் முன்னிலையில், எய்ம்ஸ் மருத்துவ அதிகாரிகள் புவனேஸ்வர் மாநகராட்சியிடம் ஒப்படைத்தனர்.
அனைத்து உடல்களும் மத்திய – மாநில மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றின் வழிகாட்டுதல்களின் படி தகனம் செய்யப்பட்டன. இறுதிச் சடங்குக்காக உடல்கள் ஒப்படைக்கப்பட்ட நிகழ்வுகள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விசாரணைக்காவும், பின்னாளில் சட்டச்சிக்கல்கள் ஏதும் வந்தால் அதற்கு பதில் அளிக்கும் விதமாகவும் உடல்களின் டிஎன்ஏக்கள் பாதுக்கப்படுகின்றன என்றார்.