வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 வகையான மாற்று ஆவணங்களுடன் வாக்களிக்க முடியும்
17-வது மக்களவையின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் 16-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய மக்களவையை அமைப்பதற்கு தேர்தல்கள் நடத்தப்பட உள்ளன. அரசியலமைப்பு சட்ட விதிகளைக் கருத்தில் கொண்டு, 18-வது மக்களவைக்கான தேர்தல்களை சுதந்திரமான முறையில் நடத்த விரிவான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
மேலும் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கான பதவிக்காலமும் நிறைவடைவதால் அவற்றிற்கான தேர்தலையும் தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலகக் கணக்குப் புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை உள்ளிட்ட 12 வகையான மாற்று ஆவணங்களுடன் வாக்களிக்க முடியும்.
18 வயது பூர்த்தி அடைந்த தகுதியான அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறைவான வாக்குப்பதிவு சதவீதம் உள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வாக்குப்பதிவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் தேதிகள்
மக்களவைத் தேர்தல் 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 89 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26-ம் தேதி நடைபெறுகிறது. 94 தொகுதிகளுக்கு 3 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 7-ம் தேதி நடைபெறுகிறது.
96 தொகுதிகளுக்கு 4 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 13-ம் தேதி நடைபெறுகிறது. 49 தொகுதிகளுக்கான 5 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 20-ம் தேதி நடைபெறுகிறது. 57 தொகுதிகளுக்கான 6 ஆம் கட்டம் வாக்குப்பதிவு மே 25-ம் தேதி நடைபெறுகிறது. 57 தொகுதிகளுக்கான இறுதி மற்றும் 7வது கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறுகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி : தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது . தமிழ்நாட்டில் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடைமுறைகள் :
வேட்புமனு தாக்கல் தொடக்கம்- மார்ச் 20
வேட்புமனு தாக்கல் முடிவு- மார்ச் 27
வேட்புமனு பரிசீலனை – மார்ச் 28
வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 30
வாக்குப்பதிவு- ஏப்ரல் 19
4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்கள்:
மக்களவைத் தேர்தலுடன் நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல்களும் நடைபெற உள்ளன.
ஆந்திரா: வாக்குப்பதிவு – மே 13, 2024
அருணாச்சலப் பிரதேசம்: வாக்குப்பதிவு – ஏப்ரல் 19, 2024
சிக்கிம்: வாக்குப்பதிவு – ஏப்ரல் 19, 2024
ஒடிசா: மே 13, 2024 (28 சட்டப் பேரவைத் தொகுதிகள்),
தேர்தல் முடிவுகள்: மக்களவைத் தேர்தல், நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் மற்றும் சட்டப் பேரவை இடைத் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் 2024 ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.