காசாவில் கனமழை பெய்து வருவதால், தண்ணீர் இல்லாமல் அவதியுற்ற மக்கள், தற்போது மழைநீரை பிடித்து குடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். மேலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது உடமைகளையும், இருப்பிடங்களையும் இழந்து தவித்து வருகின்றனர். தங்களது அத்தியாவசிய தேவைகளான உணவு, உடை நீருக்கே தினமும் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், காசாவில் கனமழை பெய்து காசாவே வெள்ள நகரமாக காட்சியளிக்கிறது. தினமும் குடிநீருக்கே போராடி வந்த மக்கள் மழை நீரை சேகரித்து அதை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். மேலும், காசா முழுவதும் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், தற்காலிகமாக தங்கியிருக்கும் இடங்களையும் உடமைகளையும் இழந்து அவதியுறுகின்றனர்.
குளிரும் கடுமையாக நிலவுவதால், மழை காரணமாக தொற்றுநோய்களும் பரவுகிறது. போரினால் மருத்துமனைகளும் நிரம்பி காணப்படுவதால், இந்த தொற்றுநோய்களுக்கான சிகிச்சைகளையும் பெற முடியாத அவதி நிலையில் காசா மக்கள் உள்ளனர். தொடர்ந்தும் இதே நிலை காணப்பட்டால், கடும் குளிர் மற்றும், சுகாதார வசதிகள் கிடைக்காததால், மக்கள் பலியாகும் நிலை ஏற்படலாம் என கூறப்படுகிறது.