பிரபல விஜய் டிவியில் கலக்கப்போவது யார் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாலா. இவர், தன்னால் முடிந்த உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கும் செய்து வருகிறார். அதேபோல், உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வரும் நடிகர், நடிகைகளையும் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல், சிகிச்சைக்கு பணம் கொடுத்தும் உதவி வருகிறார். அந்த வகையில், தற்போது பழம்பெரும் நடிகை ஒருவருக்கு திரைத்துறையினர் உதவி செய்யாத நிலையில், பாலா தானாக முன்வந்து உதவி செய்திக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் நடிகர்களை பார்த்தாலே சிரிப்பு வரும். அதுபோல பலரையும் மனம் விட்டு சிரிக்க வைத்த நடிகைகளில் ஒருவர் பிந்து கோஷ். இவர் 100-க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்திருந்தாலும், அவருடைய உடல் எடை தான் அவருக்கு பிளஸ் ஆக அமைந்தது. சினிமாவில் இருந்து விலகிய பிறகு சொந்த வீடு, வாசல் என மகிழ்ச்சியாக இருந்த இவர், தற்போது தனது மகன்களுக்காக அனைத்தையும் விற்றுவிட்டு சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்.
தற்போது நடிகை பிந்துகோஷுக்கு 76 வயதை கடந்த நிலையில், அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில், ”எனக்கு பிபி, சுகர் எல்லாமே இருக்கு. மருத்துவமனைக்கு போனா 40 ஆயிரம், 50 ஆயிரம் கேக்குறாங்க. நான் வாழ்றதுக்கே கஷ்டப்பட்டுட்டு இருக்கேன். என்னால அவ்வளவு பணம் எல்லாம் தர முடியாது. இதுவரை ரூ.3 லட்சம் வரை செலவு செய்து விட்டேன். ஆனால், எதுவும் சரியாகவில்லை“ என்று உருக்கமாக பேசியிருந்தார்.
இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், நடிகை ஷகிலா அவரை சந்தித்து பேட்டி எடுத்தார். அப்போது, “நான் போன் பண்ணக்கூடா என் மூத்த மகன் பணத்திற்காகத்தான் என்று நினைத்துக் கொண்டு என்னுடைய ஃபோனை எடுப்பதே இல்லை. 2-வது மகன் கிடைத்த வேலையை செய்து வருகிறான். அவனால் என் மருத்துவ செலவை பார்க்க முடியவில்லை” என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்த பாலா, தானாக முன் வந்து உதவி செய்துள்ளார்.
மருத்துவ செலவுக்காக பிந்து கோஷுக்கு ரூ. 80,000 கொடுத்து உதவியுள்ளார். மேலும், என்ன மருத்துவ உதவி வேண்டும் என்றாலும் என்னிடம் கேளுங்கள் என்று ஆறுதல் கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோவை சமூக வலைதளத்தில் ஷகிலா வெளியிட்டுள்ளார். “ஒருத்தருக்கு உடம்பு சரியில்லன்னு பாலா கிட்ட பேசினேன். என் குழந்தை இன்னிக்கி வந்து நிக்கிறான். ரூ.80,000 கொடுத்துட்டு போய்ட்டான். இதுக்குமேலே என்ன மருத்துவ செலவு வந்தாலும் கூப்புடுங்கனு சொல்லிட்டு போய்ட்டான்” என உருக்கமாக பேசியுள்ளார்.