வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய வழக்கில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்..
தமிழகத்தில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வதந்தி பரவியது. இதுதொடர்பாக பல்வேறு போலி வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.. மேலும் வடமாநில தொழிலாளர்கள் குறித்து பொய் செய்தி பரப்பினால், 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்திருந்தார். மேலும் தமிழகத்தில் வட மாநிலத்தவர் உள்ளிட்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று தமிழக அரசு தெரிவித்தது..
இதனிடையே பீகாரை சேர்ந்த குழுவினர், வடமாநில தொழிலாளர் நிலை குறித்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்தனர்.. இந்த சூழலில் கடந்த 7-ம் தேதி, வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய வழக்கில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ரூபேஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.. வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தவறான செய்தி பரப்பியதாக அவர் மீது திருப்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர்.. அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது..
இதுகுறித்து திருப்பூர் சைபர் கிரைம் போலீசார் 5 வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.. அதில் வேறு மாநிலங்களில் நடக்கும் சம்பவங்களை தமிழகத்தில் நடந்தது என்று குறிப்பிட்டு பிரசாந்த் குமார் என்பவர் வதந்தி பரப்பியது தெரியவந்தது.. இதை தொடர்ந்து பிரசாந்த் குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.. இந்த சூழலில் வடமாநில தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ வெளியிட்டு அவதூறு பரப்பிய வழக்கில், பிரசாந்த் குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.. ஜார்கண்ட் சென்ற தமிழக சைபர் கிரைம் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.. அவரை திருப்பூர் அழைத்து வந்து மேலும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்..