தமிழகம், புதுச்சேரி, கடலோர ஆந்திரா, தெற்கு கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் இருந்து தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகி இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பொதுவாக அக்டோபர் மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், நவம்பர் டிசம்பர் மாதங்களில் இது அதிக தமிழகத்திற்கு கனமழையை கொடுக்கும் நிலை இருந்து வருகிறது. ஒட்டுமொத்த இந்தியாவும் தென்மேற்கு பருவமழை மூலமாக பெரும் போது, தமிழகம் மட்டும் தான் 60 சதவீதத்திற்கும் அதிகமான மழையை வடகிழக்கு பருவமழை மூலமாக பெறுகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 5 நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கியதாக் வானிலையா ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை மூலமாக 112செ.மீ-க்கும் அதிகமான மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், “தென்மேற்கு பருவமழை முழுவதும் நிறைவுபெற்று, வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் பெரும்பாலான இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (அக்.15) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. சென்னையில் இன்றும், நாளையும் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் பல இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.