தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஒட்டுமொத்தமாக 4% கூடுதலாகவும், திருநெல்வேலியில் 158% கூடுதலாகவும் பெய்துள்ளது.
தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடக்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வட கிழக்கு பருவமழை எந்த ஆண்டிலும் இல்லாத அளவுக்கு இரண்டுகட்டமாக அதிக அளவில் மழையை கொட்டித் தீர்த்தது.
குறிப்பாக மிக்ஜாம் புயல் காரணமாக வட தமிழ்நாட்டில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பெருமழை பெய்தது. அதற்கு அடுத்து தென் தமிழ்நாட்டில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பெரும் மழை பெய்து எங்கும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் இயல்பாக 442.8 மிமீ மழை பெய்ய வேண்டும். ஆனால், 458.9 மிமீ மழை பெய்துள்ளது. ஒட்டுமொத்தமாக டிசம்பர் வரை 4% கூடுதலாக மழை பெய்துள்ளது. சென்னையில் இயல்பாக 809.6 மிமீ மழைக்கு பதிலாக 1088.9 மிமீ மழை பெய்துள்ளது.
இது இயல்பைவிட 35% கூடுதல். கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பாக 532.6மிமீ பெய்ய வேண்டும். 1050.9 மிமீ பெய்துள்ளது. இது இயல்பைவிட 97% கூடுதல். தென்காசியில் இயல்பாக 465.7 மிமீ பெய்ய வேண்டிய நிலையில், 821.3 மிமீ வரை பெய்துள்ளது. இது இயல்பைவிட 76% கூடுதல். தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பாக 441.9 மிமீ பெய்ய வேண்டிய நிலையில், 812.4 மிமீ பெய்துள்ளது. இது இயல்பைவிட 84% கூடுதல். மேலும், திருநெல்வேலி மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டில் 514.9 மிமீ மழை பெய்ய வேண்டிய நிலையில், 1329.6 மிமீ மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 158% சதவீதம் கூடுதல் ஆகும்.