வடமாநில தொழிலாளர் விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது..
டெல்லியை சேர்ந்த பாஜக முக்கிய பிரமுகராக உள்ள பிரசாந்த் உம்ராவ் என்பவர், கடந்த மாதம் 3-ம் தேதி, பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் கொடூரமாக தாக்கப்படுவதாக வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.. பீகார் மற்றும் வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு பாதுகாப்பான இடம் இல்லை என்றும் பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து அவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அவர் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார்.. ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்த நிலையில் தன் மீது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவற்றை ஒன்றாக சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரசாந்த் உம்ராவ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த மனு இன்று தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிரசாந்த் உம்ராவின் ட்விட்டர் பதிவுகள் சமுதாயத்தில் பெரும் தாக்கத்தையும், பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்தக்கூடியது.. ஆனால் அதற்காக அவர் மன்னிப்பு கேட்கவில்லை..” என்று வாதிட்டார்..
அப்போது பிரசாந்த் உம்ராவ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “ பிரசாந்த் உம்ராவ் தெரியாமல் ட்வீட் போட்டுவிட்டார்.. தவறு என்று தெரிந்த உடன் அதை நீக்கிவிட்டார். காவல்துறை முன்பு ஆஜராகும் போது நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்..
அப்போது நீதிபதிகள், பிரசாந்த் உம்ராவ் ஒரு வழக்கறிஞர், அவரை போன்ற நபர்கள் கூடுதல் பொறுப்புடன் நடக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.. வரும் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் பிரசாந்த் உம்ராவ் காவல்துறை முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.. ஆஜராகும் போது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்..