பாலியல் புகார் தொடர்பான இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவருக்கு எதிரான போராட்டத்தை கைவிடவில்லை என்று சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளனர்.
பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவருமான பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். அவரை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் தங்களின் பதக்கங்களை கங்கையில் வீசவும் அவர்கள் முடிவு செய்தனர். நாடு முழுவதும் இப்பிரச்னை பூதாகரமாக வெடித்த நிலையில், பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், சங்கீதா போகத் உள்ளிட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்டவர்கள் மீண்டும் ரயில்வே பணிக்கு திரும்பினர்.
ஆனால், போராட்டத்தில் இருந்து பின்வாங்கவில்லை என்று சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர். போராட்டத்தின் ஊடே, தனது கடமையை நிறைவேற்ற ரயில்வே பணிக்கு திரும்பியதாக சாக்ஷி குறிப்பிட்டுள்ளார். நீதி கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா டிவிட்டர் வாயிலாக தெரிவித்துள்ளனர்.