அரசுத் துறைகளில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உட்பட குரூப் 2, 2A பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த 2022-ல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. இதற்கான முதல்நிலை, முதன்மைத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டுவிட்டன. அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வுகொண்ட குரூப் 2 பதவிகளில் 161 பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணிகள் கடந்த மாதம் தொடங்கின.
சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 327 பட்டதாரிகளின் பட்டியலை டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. இந்த நிலையில் ஒருங்கிணைந்த குரூப் 2 பணியிடங்களுக்கான முதல்கட்ட நேர்முகத்தேர்வு பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 17-ம் தேதி வரை நடைபெறும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கான கலந்தாய்வு பிப்ரவரி 21-ம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து தேர்வாணை செயலாளர் கோபால சுந்தர் ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு II அறிவிக்கை எண்.03/2022 நாள்: 23.022022, தொகுதி-II நேர்முகத் தேர்வு பதவிகளுக்கான முதல் கட்ட நேர்முகத் தேர்வு 12.022024 முதல் 17.02.2024 வரை நடைபெற உள்ளது. இதற்கான கலந்தாய்வு 21.02.2024 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.