அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் இருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வை துறை அமைச்சர் முத்துசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. முத்துசாமி மது விற்பனை தொடர்பாக பல்வேறு புதிய முடிவுகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, 90 மிலி டெட்ரோ பேக்குகளில் மது விற்பனை செய்வது தொடர்பான ஆய்வும் நடைபெற்று வருகிறது.
அதேபோல், கட்டிட தொழிலாளிகளின் வசதிக்காக காலை 7 மணி முதல் 9 மணி வரை மதுக்கடையை திறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வருவதாகவும், இதுகுறித்து பரிசீலனை நடப்பதாகவும் அமைச்சர் முத்துசாமி கூறியிருந்தார். ஆனால், இதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையில், டாஸ்மாக் கடைகள் திறக்கும் நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாது என விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் முத்துசாமி, ”21-வயதுக்கு குறைவான இளைஞர்கள் வந்தால் மது கொடுக்கக் கூடாது என்று அறிவுறுத்தியிருப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 21-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு குறைவான வயதில் உள்ள இளைஞர்கள் வந்தால் மது கொடுக்கக்கூடாது. உரிய ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் கொடுத்து திருப்பி அனுப்பி வைக்க டாஸ்மாக் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.
தமிழ்நாடு முழுவதும் போதை மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மறுவாழ்வு மையங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. பரீட்சார்த்த முறையில் 3 மாவட்டங்களில் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து வேன் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். குடிப்பவர்களை விமர்சிப்பதற்கு பதில் அவர்களுக்கு ஆலோசனை வழங்குங்கள். கடுமையான பணிச்சூழலில் இருப்பவர்கள் குடிக்கும்போது அவர்களை குடிகாரர்கள் என கூறக்கூடாது. ஜாலிக்காக குடிப்பவர்களை குடிகாரர்கள் என கூறுவதில் தவறில்லை” என்று தெரிவித்தார்.