இனி அரசாங்கத்திற்கு இடம் ஏதும் தேவை என்றால், ஜி ஸ்கொயர் நிறுவனத்திடம் இருந்துதான் வாங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”புதிய கல்விக் கொள்கையால் அனைத்து தேசிய இனங்களின் மொழிகளும் அழியும். அவர்களின் நோக்கம் இந்தி, சமஸ்கிருதத்தை வளர்ப்பது தான். புதிய கொள்கை குழந்தைகளுக்கான மரண சாசனம். நீட் தேர்வுக்கு முன்பாகவே நல்ல மருத்துவர்கள் உருவாகி இருக்கிறார்கள். பிரதமர் மோடிக்கு உடல் நிலை சரியில்லை என்றால் மருத்துவம் பார்ப்பது ஏற்கனவே இருந்த மருத்துவர்கள் தானே. உக்ரைன் போரினால் மாணவர்கள் இங்கு படிப்பை தொடர முடியாது என்று மத்திய அரசு கூறியிருக்கிறது. இந்தியாவில் படிக்காமல் இருப்பதே நல்லது.

வக்பு வாரிய சொத்து தொடர்பான அறிவிப்புக்கு பின்னணியில் ஜி-ஸ்கொயர் நிறுவனம் உள்ளது. அவர்கள், தமிழகம் முழுவதும் உள்ள சொத்துக்களை வாங்கி குவிக்கிறார்கள். இனி அரசாங்கத்திற்கு இடம் ஏதும் தேவை என்றால், ஜி-ஸ்கொயர் நிறுவனத்திடம் இருந்துதான் வாங்க வேண்டும். ஜி-ஸ்கொயர் நிறுவன சொத்துகள் குறித்த வில்லங்கங்கள் வெளியில் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக தான், பத்திரப்பதிவு அலுவலகத்தில் வில்லங்க சான்றிதழ் பெறமுடியாத நிலையை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

மதங்கள் இல்லை என்று சொல்பவரை செருப்பால் அடிப்பேன் என்று நடிகர் மயில்சாமி கூறியிருப்பது பற்றிய கேள்விக்கு, மதங்கள் இல்லை என்று யாரும் சொல்லவில்லை. எது தங்கள் சமயக் கோட்பாடு என் பதில் தான் வேறுபாடு உள்ளது”. இவ்வாறு அவர் கூறினார்.