அரசு துறைகளில் பணியாற்றும் ஆண் ஊழியர்களுக்கும் குழந்தை வளர்ப்பு விடுமுறை வழங்க ஆலோசித்து வருவதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடக மேல் சபையில் காங்கிரஸ் உறுப்பினர் நசீர் அகமதுவின் கேள்விக்கு சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், ”18 வயது வரை உள்ளவர்களுக்கு பெற்றோரின் அரவணைப்பு முழுமையாக தேவைப்படுகின்றது. பொதுவாகவே அரசு பெண் ஊழியர்களுக்கு 180 நாட்கள் குழந்தை வளர்ப்பு விடுமுறை வழங்கப்படுகிறது. குழந்தைகள் 18 வயதை அடைவதற்குள் எப்போது வேண்டுமானாலும் அந்த விடுமுறையை எடுத்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக பெண்கள் தான் குழந்தை வளர்ப்பில் அதிகம் ஈடுபடுகின்றனர். அதற்காக பெண் ஊழியர்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால், ஆண் ஊழியர்களுக்கும் இந்த விடுமுறை வழங்கும் திட்டம் இன்னும் கொண்டுவரவில்லை.

விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது என கேள்வி எழுப்ப முடியுமா? ஆனால், குழந்தைகளை வளர்க்க விடுமுறை அளிக்கப்படுகின்றது. பெரும்பாலான பெண் ஊழியர்கள் தங்களின் மகன் மற்றும் மகள் பொது நுழைவுத் தேர்வு எழுதும் நேரத்தில் அவர்களுக்கு உதவ இந்த விடுமுறையை பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆனால், மனைவி இறந்துவிட்டால் அத்தகைய சூழ்நிலையில் குழந்தைகளை வளர்க்க ஆண் ஊழியர்களுக்கு இந்த குழந்தை வளர்ப்பு விடுமுறை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.