ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத சாதாரண டிக்கெட் எடுத்த பயணிகள், ஒருசில பெட்டிகளில் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்றும் முன்பதிவு செய்யப்பட்ட, படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணம் செய்ய முடியாது என்பதும் தெரிந்தது. அதையும் மீறி சாதாரண டிக்கெட் எடுத்த பயணிகள் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணம் செய்தால் டிடிஆர் அபராதம் விதிப்பார் என்பதும் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில், சாதாரண டிக்கெட் எடுத்த பயணிகளையும், ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணம் செய்ய அனுமதிப்பது குறித்து ரயில்வே துறை பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தற்போது குளிர்காலத்தில் பயணிகள் பெரும்பாலும் ஏசி பெட்டிகளிலேயே அதிகம் பயணம் செய்வதாகவும், ஸ்லீப்பர் பெட்டியில் வெளியில் இருந்து வரும் குளிர் அதிகமாக இருப்பதால் ஏசி பெட்டியில் இயல்பான குளிர் மட்டுமே இருக்கும் என்பதே இதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இதனால், படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் பெட்டிகள் பல காலியாக இருப்பதாகவும் பயணிகள் இல்லாமலே இந்த பெட்டிகள் இருப்பதால் இதை சாதாரண டிக்கெட்டில் பயணம் செய்யும் பயணிகள் பயன்படுத்த அனுமதிக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு ரயிலில் படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிகள் இல்லாமல் காலியாக இருந்தால் அந்த பெட்டிகளில் சாதாரண டிக்கெட் எடுத்தவர்களையும் அனுமதிக்க பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் பெட்டியில் பயணிகள் இல்லை என்றால், அந்த பெட்டிகளை சாதாரண வகுப்பில் நின்று கொண்டிருக்கும் பயணிகள் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், அதே நேரத்தில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் முழுவதுமாக நிரம்பியிருந்தால் அதனை சாதாரண பெட்டிகளில் பயணம் செய்பவர்கள் பயன்படுத்த முடியாது என்றும் கூறப்படுகிறது.