இந்தியாவில் தெருவோர சிறு வியாபாரிகளும் கடன் பெற இயலும் வகையில் இந்த ஆண்டு டிஜிட்டல் கிரெடிட் சேவையை அறிமுகப்படுத்த மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
யுபிஐ முறையை சர்வதேச பணப் பரிவர்த்தனை முறையாக மாற்றும் முயற்சியில் என்சிபிஐ இறங்கியுள்ளது. இந்தநிலையில், இதுதொடர்பாக டிஜிட்டல் பேமென்ட்ஸ் உத்சவ் என்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், யுபிஐ சேவை போலவே இந்தியாவில் “டிஜிட்டல் கிரெடிட் சேவையும் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்தார். இந்தத் திட்டத்தின் மூலம் பெரிய வங்கிகளில் இருந்து தெருவோர சிறு வியாபாரிகள் கூட கடன் பெற இயலும் என்று கூறிய அமைச்சர், இது பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவில் மற்றுமொரு பெரிய சாதனையாக அமையும் என்று தெரிவித்தார்.
நடப்பாண்டிலேயே இந்த டிஜிட்டல் கிரெடிட் சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்த அமைச்சர், அடுத்த 10 முதல் 12 மாதங்களுக்கு NCPI டிஜிட்டல் கிரெடிட் சேவையை முன்னின்று ஏற்று நடத்தும் என்றும் இதன் மூலம் டிஜிட்டல் கிரெடிட் சேவை வலுவாக கட்டமைக்கப்படும் என்றும் கூறினார். ஏற்கனவே சிங்கப்பூர், நேபாள், பூட்டான், பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுடன் என்சிபிஐ இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த யுபிஐ சேவை தற்போது, ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, சிங்கப்பூர், யுஏஇ, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய 10 நாடுகளில் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் சார்பில் உருவாக்கப்பட்ட யுபிஐ சேவையை வாய்ஸ் பேஸ்ட் பேமென்ட் முறையாக மாற்றும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் விரைவில் மக்கள் தங்கள் மொழியிலேயே போனில் பேசி பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் எனவும் 18 இந்திய மொழிகளில் இந்த சேவையைப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.