சென்னை புறநகர் பகுதியில் உள்ள 15 ஊராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை தாம்பரம் பெரு நகராட்சியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்தது. இந்நிலையில் தாம்பரம், பல்லாவரம், பம்மல், செம்பாக்கம், மற்றும் அனகாபுத்தூர் ஆகிய 5 நகராட்சிப் பகுதிகளையும், சிட்லப்பாக்கம், மாதம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்கரணை மற்றும் திருநீர்மலை ஆகிய 5 பேரூராட்சிகளையும் இணைத்து புதிய தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
இதையடுத்து, புதிதாக வார்டுகள் வரையறை செய்யப்பட்டு 70 வார்டுகள் நிர்ணயிக்கப்பட்டன. பின்னர், தாம்பரம் மாநகராட்சியை 5 மண்டலங்களாக பிரித்து அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், தாம்பரத்திற்கும் சென்னைக்கும் இடையில் சில ஊராட்சிகள் இருக்கின்றன. இந்த ஊராட்சிகளில் சரியாக வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவேறாமல் உள்ளதாக புகார் எழுந்தது. சரியாக தாம்பரம் தொடங்கும் முன்பும், சென்னை முடியும் இடத்திலும் கோவிலம்பாக்கம் ஊராட்சி இருக்கிறது.
இங்கு சாலை மற்றும் குடிநீர் பணிகள், பாதாள சாக்கடை உள்ளிட்ட வசதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்ற புகார் உள்ளது. இதேபோல் மேடவாக்கம், கௌல் பஜார், பெரும்பாக்கம், முடிச்சூர், திருசூலம், சீத்தாலம்பாக்கம், நன்மங்கலம், முடிச்சூர் பகுதிகளும் உள்ளன. இங்கு சென்னை, தாம்பரத்தை போன்று பணிகள் விறுவிறுப்பாக நிறைவேற்ற முடியாத நிலை உள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.
இந்நிலையில், சென்னை புறநகர் பகுதியில் உள்ள 15 ஊராட்சிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது மேடவாக்கம், கோவிலம்பாக்கம், கௌல் பஜார், பெரும்பாக்கம், முடிச்சூர், திருசூலம், சீத்தாலம்பாக்கம், நன்மங்கலம், முடிச்சூர் போன்ற பகுதிகள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.