கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இருந்து 1.27 லட்சம் பயனாளிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1,000 அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற சில தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், கடந்த அக்டோபர் மாதம் வரை 1.15 கோடி பேர் இந்த திட்டத்தில் பயனடைந்து வருவதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது 1.27 லட்சம் பெண்கள் இத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆர்டிஐ மூலம் தகவல் கிடைத்துள்ளது. இதனால் பயனாளிகளின் எண்ணிக்கை 1.15 கோடியில் இருந்து 1.14 கோடியாக குறைந்தது. அதிக வருமானம், திட்டத்தில் சேர்ந்ததும் நிலம் வாங்குதல், அரசுப் பணிகள் பெற்றது உள்ளிட்ட காரணங்களுக்காக பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு முன்பாக மகளிர் உரிமைத்தொகை திட்டம் மீண்டும் விரிவுப்படுத்தப்படவுள்ளது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு விரைவில் முதல்வரிடம் ஆலோசனை நடத்தி உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தெரிவித்திருந்தார். ஆனால், இதை பலர் தவறாக புரிந்து கொண்டனர்.
அதாவது, ரேஷன் கார்டு வைத்திருந்தாலே உரிமைத் தொகை கிடைக்கும் என நினைத்துக் கொண்டனர். இதை அமைச்சரும் தெளிவுப்படுத்திவிட்டார். எனவே, கலைஞர் உரிமைத் தொகையானது அனைவருக்கும் கொடுக்கப்படாது. அரசு இந்த திட்ட பயனாளிகளுக்கு என சில அடிப்படை விதிமுறைகளை வகுத்துள்ளது. ரேஷன் கார்டில் வசிக்கும் முகவரியில் இல்லாதவர்கள், முகவரி உள்ளிட்ட ஆவணங்கள் தவறாக இருப்பவர்களுக்கும் உரிமைத் தொகை திட்டத்தில் பெயன்பெற முடியாது.