இளநீர், இருமல் மருந்து, ஹோமியோபதி மருந்துகளை அருந்திவிட்டு பணிக்கு வரக்கூடாது என ரயில் ஓட்டுநர்களுக்கு தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் மண்டல அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதுதொடர்பாக திருவனந்தபுரம் மண்டல சீனியர் எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”ரயில் ஓட்டுநர்கள் பணிக்கு வரும் போதும், பணி முடிந்து செல்லும்போதும் இளநீர், குறிப்பிட்ட வகை பழங்கள், இருமல் மருந்துகள் உள்ளிட்ட எந்தவொரு ஆல்கஹால் கொண்ட மருந்தையும் சாப்பிடக் கூடாது” என தெரிவித்துள்ளார்.
ரயில் ஓட்டுநர்களிடம் ஆல்கஹால் பரிசோதனை செய்யும் கருவியின் மூலம் சோதனை நடத்தப்பட்டது. இதில், ஆல்கஹாலின் அளவு அதிகரித்து இருந்துள்ளது. ஆனால், ரத்த பரிசோதனை நடத்தும்போது, அதுபோன்று ஏதும் தென்படவில்லை. இதுபற்றி ரயில் ஓட்டுநர்களிடம் கேக்கும்போது, தாங்கள் இளநீர், பழங்கள், இருமல் மருந்து ஆகியவற்றை மட்டுமே சாப்பிடுவதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில், இதற்கு தீர்வு காண முடியாத நிலையில் தான், ரயில் ஓட்டுநர்களுக்கு இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவுக்கு ஓட்டுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பரிசோதனை கருவிகளில் உள்ள கோளாறுகளை சரிசெய்யாமல், எங்களுக்கான உணவுகளில் கட்டுப்பாடு விதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்துள்ளனர். மேலும், இந்த உத்தரவை ரயில்வே நிர்வாகம் திரும்பப் பெற வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும், ரயில் ஓட்டுநர் தடை செய்யப்பட்ட பொருட்களில் ஏதேனும் ஒன்றை உட்கொள்ள விரும்பினால், அவர்கள் கையொப்பமிடுவதற்கு முன்பு எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். கூடுதலாக, எந்தவொரு ஆல்கஹால் கொண்ட மருந்தையும் ரயில்வே மருத்துவ அதிகாரியின் முன் எழுத்துப்பூர்வ ஒப்புதலுடன் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.