ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் உரிமைகள் கடந்த 5 ஆண்டுகளாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்தன. டிஜிட்டல் உரிமைகளும் ஹாட்ஸ்டார் வசம் இருந்தது. ஆனால், இந்தாண்டு முதல் டிஜிட்டல் உரிமையை ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘வியாகாம் 18’ நிறுவனம் கைப்பற்றியது. மொத்தம் ரூ. 20,500 கோடி கொடுத்து இந்த உரிமையை ஹாட்ஸ்டாரிடம் இருந்து வியாகாம் 18 பெற்றுக்கொண்டது. கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரை தொலைக்காட்சியில் பார்க்க முடியாத ரசிகர்கள், ஹாட்ஸ்டார் செயலியில் மட்டுமே காண முடிந்தது. அதுவும் குறிப்பிட்ட பணம் செலுத்தி இருந்தால் தான் பார்க்க முடியும் என கட்டுப்பாடு இருந்தது.
இந்நிலையில், ஜியோ செயலி மூலம் இனி இலவசமாக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஐபிஎல் போட்டியை நேரலையாக ரசிகர்கள் பார்த்துக் கொள்ளலாம். ஹாட் ஸ்டாரை விட அதிக கோடிகளை கொடுத்து உரிமையை பெற்றுவிட்டு எதற்காக இலவசமாக கொடுக்க வேண்டும் என்ற கேள்விகள் ரசிகர்களுக்கு இருக்கலாம். ஆனால், அங்கு தான் ஒரு மாஸ்டர் திட்டத்தையே வைத்துள்ளது ஜியோ நிறுவனம். அதாவது, ஜியோ நிறுவனம் தற்போது தான் செயலியை பிரபலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. எனவே, முதலில் நாடு முழுவதும் வாடிக்கையாளர்களை கவர திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்தாண்டு ஐபிஎல் தொடரின் மூலம் 50 கோடி வாடிக்கையாளர்களை ஜியோ டிவி செயலிக்கு கொண்டு வர குறி வைத்துள்ளது. இதற்காக தான் ஐபிஎல் இலவசம் என்ற திட்டம்.