சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியான திரைப்படம் கங்குவா. இப்படம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. இதனால், இப்படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், படம் வெளியாகி 3 நாட்களுக்கு ரசிகர்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் வெளியிடக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது.
ஒரு படத்திற்கு விமர்சனங்கள் முக்கியமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தியேட்டர் வாசலில் யூடியூப் சேனல்கள் நின்று கொண்டு ரசிகர்களிடம் விமர்சனங்களை கேட்கின்றனர். மேலும், இணையத்தில் வெளியாகும் விமர்சனங்களை வைத்தே அந்தப் படத்திற்கு போகலாமா வேண்டாமா என ரசிகர்கள் முடிவு செய்துவிடுகிறார்கள். அந்த வகையில், கமல்ஹாசனின் இந்தியன் 2, சூர்யாவின் கங்குவா படங்கள் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இப்படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமே படங்களை கடுமையாக டிரோல் செய்து ரசிகர்கள் கொடுத்த விமர்சனங்கள் தான்.
இந்நிலையில், படம் வெளியான முதல் 3 நாட்களுக்கு யூடியூப் மற்றும் எக்ஸ் தளத்தில் சினிமா விமர்சனங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துவிட்டது.
மேலும், படம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது காவல்துறையில் புகாரளிக்கலாம் என்று நீதிபதி சவுந்தர் தெரிவித்துள்ளார். விமர்சனம் கருத்து சுதந்திரம் என்பதால், பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் நீதிபதி கூறியுள்ளார். விமர்சனத்தை முறைப்படுத்த விதிகள் வகுக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் யூடியூப் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.