பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பொதுமக்களே இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. மழை, வெள்ள பாதிப்பினால் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார், பிறப்புச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள் அவற்றை மீண்டும் பெறும் வகையில் அதற்கென சிறப்பு முகாம்களை நடத்தவும், பொதுமக்களுக்கு கட்டணமின்றி சான்றிதழ்களை வழங்கவும் முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜனவரி 1, 2018 முதல் பிறப்பு மற்றும் இறப்புகள் இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2018க்கு பிறகு பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உங்களுக்கு தேவைப்பட்டால், https://crstn.org என்ற இணையதளத்தின் மூலம் பொதுமக்களே இலவசமாக பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.