உலகின் நம்பர் 1 அணியாகவும், 5 முறை உலக சாம்பியன் அணியான பிரேசிலை முதல்முறையாக தோற்கடித்து வரலாற்றில் முத்திரை பதித்துள்ளது ஆப்பிரிக்க அணியான மொராக்கோ.
உலகக்கோப்பையில் தங்களுடைய திறமையை வெளிப்படுத்திய மொராக்கோ அணி, தற்போதும் அவர்களது ஃபார்மை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. பிரேசில் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கு இடையே நட்பு ரீதியிலான சர்வதேச போட்டியானது நேற்று நடைபெற்றது. நட்பு ரீதியிலான போட்டி என்றாலும் போட்டி தொடங்கிய சில நேரங்களிலேயே வாக்குவாதம், கருத்து பரிமாற்றம் என போட்டி சூடுபிடித்தது. இரண்டு அணிகளுக்குமிடையே விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில், மொராக்கோவின் மிட்-பீல்டராக இருந்த சோபியான் பௌஃபல் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, 29ஆவது நிமிடத்தில் கோலடித்து எண்ணிக்கையை மொராக்கோவிற்கு சாதகமாக தொடங்கி வைத்தார். பின்னர் பிரேசில் அணி கோலடிப்பதில் எவ்வளவு மும்முரம் காட்டியும், சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய மொராக்கோ போட்டியின் பாதி நேரத்தை கடந்தும், பிரேசிலிற்கு வாய்ப்பளிக்காமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இந்நிலையில், கிடைத்த கோல் வாய்ப்புகளை தவறவிடுதல், VAR வரை சென்று வாய்ப்பு இழப்பு என தொடர்ந்து போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமலே சென்றுகொண்டிருந்தது. போட்டியின் 67ஆவது நிமிடத்தில் பிரேசிலுக்காக முதல் கோலை பதிவு செய்தார் கேப்டன் கேசெமிரோ. அடுத்த கோலை அடித்து போட்டியை வெல்லும் தீவிரம் இரண்டு அணிகளுக்குமிடையே அதிகமாகவே இருந்த நிலையில், போட்டியின் 79ஆவது நிமிடத்தில் அற்புதமான பாஸை கோலாக மாற்றி அசத்தினார் மொராக்கோ அணியின் அப்தெல்ஹமிட் சபிரி. இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் தனது வரலாற்று வெற்றியை பதிவு செய்தது மொராக்கோ அணி. 5 முறை சாம்பியனான பிரேசில் அணியை முதல்முறையாக வரலாற்றில் வீழ்த்தியதை அடுத்து, மொராக்கோ அணிக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது.