பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ரயில் நிலையம் பயணிகள் வருகை அதிகம் காணப்படும் முக்கிய ரயில் நிலையமாக உள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள ஒரு டிவியில் ஞாயிற்றுக்கிழமை காலை ஆபாச வீடியோ ஒளிபரப்பாகியுள்ளது. விளம்பரத்திற்காக 10-வது நடைமேடையில் பொருத்தப்பட்டிருக்கும் டிவி ஒன்றில் காலை 9.30 மணியளவில், ஆபாச வீடியோ ஒளிப்பரப்பானது. சுமார் 3 நிமிடங்கள் ஒளிபரப்பான ஆபாச வீடியோவைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சில பயணிகள் பொது இடத்தில் ஆபாச வீடியோ ஒளிபரப்பப்படுவதை சகிக்க முடியாமல் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறினர். இன்னும் சிலர் அதனை படம் பிடித்து பிளர் செய்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர். அவை தற்போது வைரலாகி அதிகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.
இதனிடையே, சில பயணிகள் இதைப்பற்றி ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து ஆபாச வீடியோ ஒளிபரப்புவதை நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். பயணிகளின் புகாரைத் தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்தது. பாட்னா ரயில் நிலையத்தில் விளம்பரங்களை ஒளிபரப்ப ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள தத்தா கம்யூனிகேஷன் ஏஜென்சி என்ற நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, ஆபாச வீடியோவை உடனே நிறுத்துமாறு உத்தரவிட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக தத்தா கம்யூனிகேஷன் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அந்த நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஹிஜாபூரில் உள்ள மத்திய கிழக்கு ரயில்வே தலைமையகத்துக்கும் இதுபற்றி தெரிவிக்கப்பட்டது. மத்திய கிழக்கு ரயில்வே தத்தா கம்யூனிகேஷன் நிறுவனத்தை ரயில்வேயின் கருப்புப் பட்டியலில் சேர்த்து, அபராதமும் விதித்துள்ளது. ஆபாச வீடியோ ஒளிபரப்பானது எப்படி என்று தொடர்ந்து அந்த நிறுவனத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.