நந்தா, சேது, பிதாமகன், நான் கடவுள், பரதேசி போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் பாலா. இவரின் கதைக்களம் வித்தியாசமானவை என்பதால் ரசிகர்கள் இவரது படங்களை கொண்டாடி வந்தனர். ஆனால் சமீபத்தில் இவர் எடுத்த படங்கள் தோல்வியை சந்தித்தது. தற்போது இவரது இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வணங்கான் படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் தனது பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி தவறான செயல்களில் ஈடுபட்டுள்ள நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்திருக்கிறார்.
அந்த புகாரில் “பாலசுப்பிரமணியன் பழனிச்சாமி என்ற கணக்கில் இயக்குநர் பாலா எனக் கூறிக்கொண்டு முறையற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், குறிப்பாக திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வமுள்ள பெண்களிடம் தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்திகள் மூலமாக உரையாடி அவர்களுக்கு வாய்ப்பு தருவதாக கூறி தவறான நோக்கத்தில் பேசியதுடன் மட்டுமல்லாமல் கவர்ச்சியான புகைப்படங்களையும் கேட்டுள்ளனர். அந்த போலி கணக்கை முடக்க வேண்டும். அதில் தொடர்புடையவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தன் பெயரில் உள்ள போலியான அந்த கணக்கை முடக்கும்படியும் இயக்குநர் பாலா கேட்டு கொண்டுள்ளதாக” தெரிவிக்கப்படுகிறது.