ஒடிசாவின் பால்சோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 300 பேர் உயிரிழந்த நிலையில், 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட ஒடிசாவைச் சேர்ந்தவர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி, ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த மாநிலத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், இந்த விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும், இந்த விபத்தில் காயமடைந்த பயணிகள் கோபால்பூர், காந்தபாரா, பாலசோர், பத்ரக் மற்றும் சோரோ ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். தனியார் மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இதுவரை 793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக ஒடிசா மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.