ஒடிசா ரயில் விபத்தில் தனது கணவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறி இழப்பீட்டுக்கு விண்ணப்பித்த பெண்ணை, அவரது கணவரே போலீஸில் காட்டிக் கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம், ரயில்வே சார்பில் ரூ.10 லட்சம் மற்றும் ஒடிசா மாநில அரசு சார்பில் ரூ.5 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், லட்சக்கணக்கில் வரும் இந்த இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காக ஒடிசா மாநிலம் கட்டாக் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் விபத்துக்குள்ளான ரயிலில் தனது கணவர் பயணித்ததாகவும், நடந்த விபத்தில் அவர் இறந்துவிட்டதாகவும் நாடகமாடியுள்ளார். ஆனால், அதை அந்தக் கணவரே காவல்துறையில் தெரிவித்து பொய்யை அம்பலமாக்கினார்.
ஒடிசாவின் கட்டாக்கைச் சேர்ந்தவர் கீதாஞ்சலி தத்தா. இவருடைய கணவர் பிஜய் தத்தா. இவர் கடந்த ஜூன் 2ஆம் தேதி விபத்துக்குள்ளான ரயிலில் இருந்ததாகவும் விபத்தில் அவர் இறந்துவிட்டதாகவும் கூறினார். மேலும், சவக்கிடங்கில் இருந்த ஏதோ ஓர் உடலை தனது கணவரின் உடல் என்றும் அவர் அடையாளம் காட்டினார். ஆனால், அதிகாரிகள் சோதனையின்போது அந்தப் பெண்ணின் மீது சந்தேகம் கொண்டனர். சரியான ஆவணங்கள் இல்லாததால் அவர்கள் சந்தேகம் அடைந்தனர்.
இதற்கிடையே, கீதாஞ்சலியின் கணவர் பிஜ்ய தத்தா தனது மனைவி மீது மணியாபண்டா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தான் உயிருடன் இருக்கும்போதே இறந்துவிட்டதாக பொய் கூறியதற்காகவும், பொதுப் பணத்தை அபகரிக்க முயற்சித்ததற்காகவும் மனைவி மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரினார். அந்த வழக்கை அக்காவல் நிலைய அதிகாரி பாலசோர் மாவட்டம் பாஹநாகா காவல் நிலையத்திற்கு மாற்றினார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.