லஞ்ச வழக்கில் கைதாகியுள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை 2-வது முறையாக உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்துள்ளது.
கடந்தாண்டு நவம்பர் மாதம், திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம், சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் பெற்றதாக மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், தான் ஒரு மத்திய அரசு ஊழியர். இந்த வழக்கில் இருந்து தனக்கு ஜாமீன் வழங்குமாறு தாக்கல் செய்த மனுக்கள், திண்டுக்கல் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற கிளையில் ஏற்கனவே தள்ளுபடியானது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற கிளையில் மீண்டும் திவாரி ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். அதில், ”எனது கைது, விதிமுறைகளுக்கு எதிரானது. கைது செய்யப்பட்டு 99 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளேன். இதுவரை குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யவில்லை. சிறையில் உள்ளதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்” என்றார். இந்த மனு மீதான விசாரணை கடந்த 12ஆம் தேதி நடைபெற்றபோது, இந்த மனுவை தான் விசாரிக்க விரும்பவில்லை என்று தெரிவித்து, இந்த வழக்கில் இருந்து நீதிபதி விவேக்குமார் சிங் விலகினார்.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அரசு மற்றும் எதிர்தரப்பு வாதங்களுக்கு பிறகு, ”அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கு தீவிரமானது. அதிகாரிகள் லஞ்சம் பெறும் செயல்கள் அதிகரித்திருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது அல்ல. வருமானவரித்துறை, அமலாக்கத்துறையில் லஞ்சம் ஊடுரூவியுள்ளது. இதை சகித்துக் கொள்ள முடியாது. அமலாக்கத்துறை அதிகாரிகள் லஞ்சம் பெறும் குற்றச்சாட்டுகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்” என்று கூறி அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை 2-வது முறையாக தள்ளுபடி செய்தது.
Read More : Vijay | முதல்வர் ஓகே சொல்லிட்டாரு..!! கடற்கரையோரம் தயாராகும் விஜய்யின் மல்டிபிளக்ஸ் தியேட்டர்..!!