சிவனும் நான்தான் விஷ்ணுவும் நான்தான் என்று தன்னைத்தானே கடவுளாக அறிவித்துக் கொண்ட நித்தியானந்தா, கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், இந்து தர்மத்தைக் காக்க நித்தியானந்தா உயிர்த் தியாகம் செய்துவிட்டதாகவும் அவரின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன், ஆன்மிக சொற்பொழிவு வீடியோவில் தெரிவித்திருந்தார். ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், “நான் வீழ்வேன் என நினைத்தாயோ?” என்ற தலைப்பில் தற்போது வீடியோ ஒன்றை நித்தியானந்தா வெளியிட்டுள்ளார். அதில், பேசியுள்ள அவர், ”இன்னும் குறைந்தபட்சம் 150 ஆண்டுகள் நான் உயிருடன் இருப்பேன். நான் வன்முறையை விரும்பாதவன். என் மீது அவதூறு பரப்புவோரை நான் தாக்கப் போவது கிடையாது. “மகனுங்களா. நான் 126 வயதோடு பேக் பண்ணிட்டு போலாம்னு இருந்தேன். வீணாப் போன நாய்ங்க.. ஏகப்பட்ட டைம் வேஸ்ட் பண்ணிட்டாங்க. இதுக்கு மேல தொடர்ந்து வம்பு பண்ணீங்கன்னா, என் வாழ்நாளை 1,000 வருஷமாக்கிடுவேன்” என்று பேசியுள்ளார்.
அதேபோல், மற்றொரு வீடியோவில் பேசியுள்ள நித்தியானந்தா, ”நிறைய பேர் நான் செத்துப் போய்ட்டேன்னு வீடியோ போடுறாங்க. 3 மாதங்களில் 4,000 வீடியோக்கள் போட்டிருக்காங்க. 4,000 கிளிப்ஸையும் நான் எப்ப பார்த்து முடிக்கிறது..? சிலபஸ் கவர் பண்ணி முடிக்காத ஸ்டூடன்ட்ஸ் மாதிரி நான் வந்து உட்கார்ந்துகிட்டு இருக்கேன்.
எனக்கும் சந்தேகமா இருக்கு. நான் உயிரோடு இருக்கேனா இல்லையான்னு. சோசியல் மீடியா, யூடியூப், ஃபேஸ்புக் எல்லாம் ஒன்னு சேர்ந்து ஏதோ ஒரு வீடியோவைப் போட்டு, நான் உயிரோடுதான் இருக்கேனா இல்லையா? ஏதா ஒரு முடிவுக்கு வாங்கப்பா எப்படியோ எனக்கு வந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்க” என கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், தற்போது அவர் வெளியிட்டிருக்கும் வீடியோக்கள் பழைய வீடியோ என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இதனால், நித்தியானந்தா உண்மையிலேயே உயிருடன் இருக்கிறாரா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.