ஒரு வழக்கறிஞரை, ஒரு கிரிமினல் குற்றவாளியுடன் பாலியல் உறவில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நீதிமன்றம் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதோடு, அவர்கள் மீது, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட ஆறு காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சண்டிகரில் சென்ற 14ஆம் தேதி ஒரு வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார். காவல்துறையினரை தாக்கியதாகவும், காவல்துறையினரின் சீருடையை கிழித்ததாகவும், பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ஏற்கனவே காவல் நிலையத்தில் இருந்த குற்றவாளிகளோடு, வழக்கறிஞரை பாலியல் உறவில் ஈடுபடுமாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால், இதற்கு வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்ததால், காவல்துறையினர் அவரை சித்திரவதை செய்ததாக தெரிகிறது.
இந்த வழக்கை விசாரிக்க லூதியானா காவல் ஆணையர் மந்திப் சிங் சிந்து தலைமையில் நான்கு பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஏற்படுத்தப்பட்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து, கடந்த 22 ஆம் தேதி வழக்கறிஞர் வழங்கிய வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் மீது வழக்கு பதிவு செய்வதற்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிலையில் தான், இந்திய தண்டனை சட்டப்படி 377, 342, 506 போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து, சண்டிகரில் பஞ்சாப் மாநில முதலமைச்சரை சந்தித்து மனு வழங்கி இருக்கிறார்கள்.
மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்து, நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்திலும் வழக்கறிஞர்கள் இறங்கி உள்ளனர். வழக்கறிஞர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ரமன்தீப் சிங் புல்லர், ஆய்வாளர் ராமன் குமார் கம்போஜ் காவல்துறையைச் சார்ந்த ஹர்பன்ஸ் சிங், பூவிந்தர் சிங், குர்பிரித் சிங், தாராசிங் உள்ளிட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, இன்று காலை இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.