நம் உடல் ஆரோக்கியத்திற்கு சத்தான உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். அதுவும், ஃபார்ஸ்ட் புட் உணவுகளை தவிர்த்துவிட்டு, வீட்டு உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், நமது ஆரோக்கியமும் மேம்படும். அந்த வரிசையில், முட்டை சாப்பிடுவதால், நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அதேசமயம், முட்டையை விட 6 மடங்கு சத்துள்ள உணவு குறித்து பிரபல மருத்துவர் சிவராமன் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.
அவர் கூறுகையில், கோழி முட்டையை தினமும் நம் உணவில் சேர்த்துக் கொள்வதால் வைட்டமின், புரதம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நமக்கு கிடைக்கிறது. முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள புரதச்சத்துக்கள் நமக்கு உடனடியாக பலன் கொடுக்கிறது. வளரும் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது, வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் காலை உணவாக முட்டை கொடுப்பது அவசியம். அதே நேரத்தில் சிலர், பச்சை முட்டையை குடிக்கின்றனர். அப்படி குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல.
இதனால், முட்டையை வேக வைத்தோ அல்லது ஆம்லேட் மாதிரி செய்தோ சாப்பிடுவது தான் சரியாக இருக்கும். வேக வைத்த முட்டையில் வைட்டமின்கள், மினரல்கள் இருக்கும். இது உடனடியாக உடலுக்கு பலன் தருகிறது. முட்டையை வேக வைத்து சாப்பிடுவது தான் உடலுக்கு ஆரோக்கிய நன்மையாக இருக்கும். முட்டையின் மஞ்சள் கருவில், கொழுப்பு அதிகமாக இருப்பதாக சொல்வார்கள்.
ஆனால், அதில் நமது உடலுக்கு தேவையான கொழுப்புகள் மட்டும்தான் இருக்கிறது. அதேபோல் முட்டையில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. ஆனால், கோழி முட்டையை விட காடை முட்டையில் 6 மடங்கு சத்து அதிகம் இருக்கிறது. இந்தியாவில் காடை முட்டை பிரபலம் இல்லை என்றாலும், வெளிநாடுகளில் காடை மற்றும் அதன் முட்டை மிகவும் பிரபலம்” என்று டாக்டர் சிவராமன் கூறியுள்ளார்.