இந்தியாவில் கேப் மற்றும் ஆட்டோ சேவைகளை வழங்கும் ஊபர், ஓலா மற்றும் ரேபிடோ போன்ற நிறுவனங்கள் மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களே சொந்தமாக கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளும் வகையிலான சேவையை அமெரிக்காவைச் சேர்ந்த inDriver என்ற நிறுவனம் சென்னையில் வழங்க இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி மூலம் தெரியவந்துள்ளது. டிராஃபிக் அதிகமாக இருக்கும் சமயத்திலோ அல்லது மழை நேரத்திலோ எந்த கட்டணமும் இதன் மூலம் உயராது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த inDriver செயலியை பயன்படுத்துவதன் மூலம், பயணிகள் தங்களுடைய சவாரிக்கான விலையை தாங்களே நிர்ணயிக்கவும், அருகில் உள்ள ஓட்டுனர்களிடம் இருந்து நேரடியாக எதிர் சலுகையைப் பெறவும் அனுமதிக்கிறது. இதையொட்டி, ஓட்டுநர்களுக்கு எந்த சவாரி கோரிக்கைகள் தங்களுக்கு மிகவும் பொருத்தமானது என்பதைத் தாங்களாகவே தீர்மானிக்கவும், தங்கள் சொந்த விலைகளை பரிந்துரைக்கவும் உரிமையையும் வழங்குகிறது.

முன்பே நிறுவப்பட்ட அல்காரிதம்களைக் கொண்ட வழக்கமான cab சேவையை போல் இல்லாமல், பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள் தேர்வு சுதந்திரத்தை அனுமதிப்பதன் மூலம் தனித்துவமான சேவையை வழங்குவதை inDriver நோக்கமாகக் கொண்டிருக்கிறதாம். பல சலுகைகளைப் பெறும் பயணிகள், டிரைவரின் Estimated Time of Arrival (ETA), விலை, வாகனத்தின் மாடல் மற்றும் ஓட்டுநரின் ரேட்டிங்ஸ் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்துக் கொள்ளலாம். அதேபோல, விலை, தொலைவு, பயணிகளின் மதிப்பீடு, பிக்-அப் இடம் மற்றும் வாடிக்கையாளர் ஏற்கெனவே மேற்கொண்ட இன்டிரைவ் பயணங்களின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட ட்ரிப்பை ஓட்டுநரும் தேர்வு செய்யலாம் என்று inDriver இன் தெற்காசிய PR மேலாளரான பவித் நந்தா ஆனந்த் கூறியிருக்கிறார்.

இதுபோக, ரியல் டைம் லொகேஷன், எமெர்ஜென்சி பட்டன், பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள் இருவருக்கும் எப்போதும் சேவையை பெற 24/7 ஆதரவு போன்ற பிற பாதுகாப்பு அம்சங்களையும் இந்த inDrive சேவை வழங்குகிறதாம். கலிஃபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச தகவல் தொழில்நுட்பம் மற்றும் போக்குவரத்து தளமாக இருக்கக் கூடிய இந்த inDrive நிறுவனம் ஆஸ்திரேலியா, ரஷ்யா, பாகிஸ்தான் என உலகின் 47 நாடுகளில் 700க்கும் மேற்பட்ட நகரங்களை தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது. 150 மில்லியனுக்கும் மேலான முறை இந்த நிறுவனத்தின் செயலி டவுன்லோட் செய்யப்பட்டிருப்பதாகவும், ஏற்கனவே இந்தியாவில் லக்னோ, ஹைதராபாத், சண்டிகர் ஆகிய பகுதிகளிலும் செயல்பாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.