ஓலா, ஊபர் ஆப் மூலம் கார், ஆட்டோக்கள் புக் செய்து பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பஸ், ரயில் நிலையங்கள், விமான நிலையம் செல்வோர் செயலியை பயன்படுத்தி குறித்த நேரத்திற்கு கார், ஆட்டோ தேவை என்று புக் செய்துவிட்டால், அவர்கள் இருக்கும் இடத்திற்கே வாகனங்கள் வந்து விடுவதால் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள முடிகிறது.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் செயலியை பயன்படுத்தி மருத்துவமனை உள்ளிட்ட அவசர பயணத்திற்கு புக்கிங் செய்வதால், குறித்த நேரத்திற்கு செல்ல முடிகிறது. இந்நிலையில், வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும். பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும். மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ, கார்களை ஓட்டாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஓலா, ஊபர் டிரைவர்களின் 3-வது நாள் போராட்டத்தின் எதிரொலியாக சேவை கட்டணம் 2 மடங்காக உயர்ந்துள்ளது. ஓலா வாகனங்கள் (20 கிமீ) ரூ.400 வசூலிக்கப்படும் நிலையில், தற்போது வரை ரூ.1,000 வரை வசூலிக்கப்படுகிறது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குறைந்த டிரைவர்களே டாக்சி சேவை அளித்து வரும் நிலையில், தற்போது இந்த கட்டணம் உயர்ந்துள்ளது.