சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கம் கோவிந்தப்பன் நாயக்கர் முதல் தெருவை சேர்ந்தவர் அங்கப்பன்( 65). இவர் வீட்டின் முன்பு இருக்கின்ற பகுதியில் அங்கப்பனின் சகோதரர் முருகேசன் மற்றும் அவருடைய மகன் ரவிக்குமார் 40 உள்ளிட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அங்கப்பன் குடும்பத்திற்கும் முருகேசன் குடும்பத்திற்கும் இடையே முன்பிரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அங்கப்பனின் மகள் விஜயலட்சுமி வீட்டின் அருகே உள்ள குடிநீர் குழாயில் நேற்று முன்தினம் காலை தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரவிக்குமாரின் மனைவி வனிதா (35) என்பவர் விஜயலட்சுமியிடம் தகராறு செய்திருக்கிறார். இதனை அறிந்து கொண்ட அங்கப்பன், அவருடைய மனைவி கற்பகமும் அங்கு வந்து வனிதாவை கண்டித்ததாக சொல்லப்படுகிறது.
இதைக் கண்ட ரவிக்குமார், வனிதாவின் சகோதரி குன்றத்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கவிதா(37), அவருடைய கணவர் விக்னேஷ்(42) உள்ளிட்டோர் அங்கப்பன் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் வாக்குவாதம் அதிகரித்ததால் அவர்கள் அனைவரும் அங்கப்பனை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த அங்கப்பன், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக மதுரவாயல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலை குறித்து ரவிக்குமார், விக்னேஷ், வனிதா, கவிதா உள்ளிட்ட 4 பேரை நேற்று காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள் இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.