மதுரை கீழக்குடி பகுதியில் துரைசாமி என்பவர், சாலையோர உணவகம் ஒன்று வைத்துள்ளார். வழக்கம் போல் இவர் அதிகாலையில் கடையை திறந்துள்ளார். அப்போது, இளைஞர்கள் சிலர் அதிகாலை 5 மணிக்கு மது போதையில் இவரது கடைக்கு வந்துள்ளனர். பின்னர், கடையில் பணியிலிருந்த முதியவரிடம் சூடாக வடை வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்க்கு அந்த முதியவர் மற்றும் கடையின் உரிமையாளர், ஆறு மணிக்கு மேல் தான் வடை சுடுவோம் என கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பணியிலிருந்த முதியவரை கொடூரமாக தாக்கியுள்ளனர்.
மேலும், கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் அந்த கடையில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதையடுத்து, கடையின் உரிமையாளர் நடந்த சம்பவத்தை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், புகாரின் பேரில், போலீசார் கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.