ஜார்கண்ட் மாநிலத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசின் சில குறிப்பிட்ட துறைகளின் கீழ் உள்ள ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004ல் புதிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதே ஆண்டு ஜனவரி 1ம் தேதி அல்லது அதற்குப் பின் மத்திய அரசில் சேர்ந்த ஊழியர்களுக்கு, விருப்பத்தின் அடிப்படையில் புதிய ஓய்வூதிய முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய மற்றும் பழைய ஓய்வூதிய திட்டங்களுக்கு இடையே மிகப்பெரிய வேறுபாடாக இருப்பது, பயனாளிகளுக்கு வழங்கப்படும் தொகையின் அளவாகும்.
பழைய திட்டத்தின்படி, ஊழியர்கள் பணி ஓய்வு பெறும்போது பெறும் ஊதியத்தில் பாதி ஓய்வூதியமாகக் கிடைக்கும். இதற்காக ஊழியர்களின் பணிக் காலத்தில் அவர்களது ஊதியத்திலிருந்து பிடித்தம் எதுவும் செய்யப்படாது. அதே நேரத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் மற்றும் அகவிலைப்படி பிடித்தம் செய்யப்படும். இதனால் அவர்களுக்கு கூடுதலான ஓய்வூதியம் கிடைக்கும்.
மேலும், பழைய திட்டம் மூலம் நிலையான ஓய்வூதியம் கிடைக்கும். ஆனால், புதிய முறையில் அப்படி இல்லை. இதனால், புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர வேண்டும் என அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்கள், பழைய முறையையே தொடர விரும்புவதற்கான முடிவை மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளன.
இந்தநிலையில், ஆசிரியர்கள் மற்றும் அரசின் சில குறிப்பிட்ட துறைகளின் கீழ் உள்ள ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 11 ஆகஸ்ட் 2023 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உத்தரவின்படி, தீர்மானக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதிய நலத்துறை, இந்திய அரசு, பிப்ரவரி 17, 2020 இன் படி, 1 ஆகஸ்ட் 2022 அன்று நிதித் துறையின் தீர்மானத்தின்படி, பணி நியமனம் மற்றும் இறுதி முடிவுகள் 1 டிசம்பர் 2004க்கு முன் அறிவிக்கப்பட்டு, ஆனால் நிர்வாக காரணங்களால் , அவர்களின் நியமனம் டிசம்பர் 1, 2004 -க்கு பிறகு செய்யப்பட்ட பணியாளர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர விருப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
பல ஊழியர்களுக்கான இறுதி முடிவுகள் டிசம்பர் 1, 2004 க்கு முன்னர் அறிவிக்கப்பட்டன, ஆனால் நிர்வாகக் காரணங்கள், காவல்துறை சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை போன்றவற்றின் பின்னர் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் டிசம்பர் 1, 2004 க்குப் பிறகு நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டனர். இப்போது அவர்களும் இந்த திட்டத்தின் பலனைப் பெறுவார்கள்.
இந்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதிய நலத் துறையின் மார்ச் 3, 2023 தேதியிட்ட அலுவலக குறிப்பாணையின்படி, புதிய ஓய்வூதிய பங்களிப்பை செயல்படுத்துவது தொடர்பான அறிவிப்பின் தேதிக்கு முன்னதாக ஆட்சேர்ப்பு உத்தரவின் படி நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தேர்வு செய்ய ஒரு முறை விருப்பம் அளிக்கப்படும்.பழைய ஓய்வூதியத் திட்டத்தை அனுமதிக்க, என்பிஎஸ் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையைத் திரும்பப் பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.