சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி கிராமத்தை சேர்ந்தவர் 70 வயதான லட்சுமி. இவரது கணவர் உயிழந்து விட்டார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமான நிலையில், மூதாட்டி லட்சுமி தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி மூதாட்டி லட்சுமி தனது உறவினரின் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். மதியம் ஒரு மணியளவில் அவர் வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அப்போது, 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மூதாட்டியின் வீட்டுக்கு வந்துள்ளார். மேலும், உங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வாங்கிக் கொடுக்க வந்திருப்பதாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து, மூதாட்டி லட்சுமி அந்த பெண்ணை வீட்டுக்குள் அழைத்து அமர வைத்துள்ளார். இதையடுத்து, மூதாட்டி லட்சுமியிடம் அடையாள அட்டைகளைக் அந்த இளம்பெண் கேட்டுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த பெண் மூதாட்டி லட்சுமி அணிந்திருந்த 30 சவரன் மதிப்புள்ள தங்க நகைகளைக் கொள்ளையடிக்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி, கூச்சலிடத் தொடங்கியுள்ளார். ஆனால் அதற்குள், அந்த பெண் நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து உடனடியாகத் தப்பிச் சென்றுள்ளார். மேலும், இதில் பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், சிறிது நேரம் கழித்து உறவினர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மூதாட்டி லட்சுமி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், இச்சம்பவம் குறித்து காளையார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த சிவகங்கை போலீசார், மூதாட்டியின் வீட்டை முழுவதுமாக ஆய்வு மேற்கொண்டனர். மேலும், மூதாட்டியின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காளையார்கோவில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.