சிங்கப்பூரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என உள்துறை அமைச்சர் சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். பயங்கரவாத சதித் திட்டம் தீட்டியதாக பெண் உள்பட 3 பேரை சிங்கப்பூர் பாதுகாப்பு படையினர் கைது செய்திருக்கும் நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் கலந்துகொண்ட அமைச்சர் சண்முகம், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போதும், “தீவிர வலதுசாரி சித்தாந்தங்களை பின்பற்றும் 3-வது இளைஞர் பயங்கரவாத சதித் திட்டத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இவர், சீன – மலேசிய மக்களுக்கு இடையே இனக் கலவரத்தை தூண்ட திட்டமிட்டிருந்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நியூசிலாந்தில் உள்ள மசூதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தி 51 பேரைக் கொன்றவரை இந்த இளைஞர் பின்தொடர்ந்து வருகிறார். மேலும், இவர், சிங்கப்பூர் மசூதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார். இதே வழக்கில் இல்லத்தரசி ஒருவரும், தூய்மைப் பணியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவேளை பயங்கரவாத தாக்குதல் நடக்கும் பட்சத்தில், மக்கள் மன ரீதியில் தயாராக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.