கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து முதற்கட்டமாக அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டன. தொடர்ந்து ஜனவரி 24ஆம் தேதி முதல் தனியார் சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் 710 அரசுப் பேருந்துகளும் கடந்த 30ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் கடந்த ஜனவரி 24ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில், மறு உத்தரவு வரும் வரை கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம். போரூர், சூரப்பட்டு சுங்கச் சாவடிகளிலும் பயணிகளை ஏற்றி இறக்கிக் கொள்ளலாம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்காமல் தென் மாவட்டத்திற்கு செல்லும் எந்த ஆம்னி பேருந்தையும் இயக்கக் கூடாது. ஆன்லைன், மொபைல் ஆப்களில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகளை ஏற்றி இறக்க வேறு இடங்களைக் குறிப்பிடக் கூடாது” என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து கோயம்பேட்டில் இருந்து கடந்த 10ஆம் தேதி இரவு முதல் மீண்டும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், போக்குவரத்துத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், “சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்கக் கூடாது. பணிமனைகள் அமைந்துள்ள இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்க உயர்நீதிமன்றம் எந்த உத்தரவையும் வழங்கவில்லை. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை முழு பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பின்னரே நடைமுறை சிக்கல்களை குறித்து அறிய இயலும்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி போரூர் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் மட்டுமே பயணிகளை ஏற்றி, இறக்கும் இடங்களாக குறிப்பிட வேண்டும். ஆம்னி பேருந்துகள் தங்களது பேருந்து பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் செயலிகளில் பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். சில ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் தவறான புரிதலால் தேவையற்ற குழப்பம் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது. தவறான கண்ணோட்டத்துடன் செயல்படும் ஆம்னி பேருந்துகள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.