கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை வரும் 29ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு உள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 5,87,691 பேருக்கும், நலவாழ்வு மையங்களில் வசிக்கும் 20,000 ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஓணம் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
ஓணம் பரிசுத்தொகுப்பாக தேயிலை தூள், சிறு பருப்பு, சேமியா பாயசம் கலவை, முந்திரி, நெய், தேங்காய் எண்ணெய், மஞ்சள் தூள், சாம்பார் தூள், மிளகு தூள், மல்லிப்பொடி, துவரம் பருப்பு, சிறுபயிறு மற்றும் உப்பு ஆகியவை ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும். இதற்காக சப்ளை கோ நிறுவனத்திற்கு முன்பணமாக ரூ.32 கோடி வழங்கப்படுகிறது“ என்று தெரிவித்தார்.
முதலமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து, ஓணம் பரிசு தொகுப்பு விரைவில் ரேஷன் கடைகளுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. கடந்தாண்டு 86 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஓணம் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு நிதி நெருக்கடியால் 6 லட்சத்து 7 ஆயிரத்து 691 பேருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அதேபோல், கடந்தாண்டு 17 பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு உலர் அரிசி, சர்க்கரை வரட்டி, சீனி, ஏலக்காய் ஆகிய 4 பொருட்கள் நீக்கப்பட்டு 13 பொருட்கள் வழங்கப்பட இருக்கின்றன.