‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலை குழு இன்று கூடுகிறது.
மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுவருகிறது. இதுதொடர்பாக சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலை குழு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ள விஷயங்கள் குறித்து எழுத்துப்பூர்வ தீர்மானங்கள் எதுவும் குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்படவில்லை என்றபோதும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் மீது விவாதம் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.
உயர்நிலை குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் அண்மையில் நடைபெற்றது. அப்போது, நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள், மாநிலங்களில் ஆட்சியில் உள்ள கட்சிகள், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகள், இதர அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளை அழைத்து யோசனைகள் மற்றும் கருத்துகள் கேட்கவும் சட்ட ஆணையத்திடமும் யோசனைகள் மற்றும் கருத்துகள் பெறவும் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. அதன் பின்னர் 6 தேசிய கட்சிகள் மற்றும் 33 மாநில அரசியல் கட்சிகளுக்கு உயர்நிலைக் குழு சார்பில் கடிதமும் எழுதப்பட்டது. அதில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நடைமுறை மீதான தங்களின் கருத்துகளைத் தெரிவிக்குமாறும், அதுகுறித்து நேரில் விவாதிக்க பரஸ்பரம் உடன்படக்கூடிய தேதியை குறிப்பிடுமாறும் உயர்நிலைக் குழு கேட்டுக்கொண்டது.