இமாச்சல பிரதேசத்தில் 90 ஆயிரம் மதிப்பிலான டுவீலருக்கு ஒருகோடி ரூபாய் செலவழித்து பேன்சி எண்ணை ஒருவர் வாங்கியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள சாலைகளில் இயக்கப்படும் அனைத்து வாகனங்களையும் நிச்சயம் பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கு அனைத்து மாநிலங்களும் குறிப்பிட்ட தொகையை தனியாக கட்டணமாகவும் வசூலிக்கின்றன. இருப்பினும் பல மாநிலங்கள் பேன்சி நம்பர்களை தனியாக ஏலமும் விடுகின்றன. பேன்சி நம்பர்களை பெற விரும்பும் நபர்கள் இதுபோன்ற ஏலத்தில் பங்கேற்று பிடித்த பேன்சி நம்பரை ஏலம் எடுத்துக் கொள்ளலாம்.
அந்தவகையில் இமாச்சல பிரதேச போக்குவரத்துத் துறை சார்பில் ஏலம் நடத்தப்பட்டது. அதில், இமாச்சல பிரதேசத்தில் HP-99-9999 என்ற வாகன எண்ணுக்கு ஏலம் நடந்தது. இதில் பலரும் கலந்து கொண்ட நிலையில், தேஷ்ராஜ் என்பவர் தனது ஸ்கூட்டிக்காக ரூ. 1.12 கோடிக்கு இந்த எண்ணை ஏலம் எடுத்துள்ளார். 90 ஆயிரம் மதிப்பிலான ஸ்கூட்டிக்கு தேஷ்ராஜ் ஒரு கோடி செலவழித்து பேன்சி எண்ணை வாங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுதவிர இன்னும் சில பேன்சி எண்களும் ஏலம் விடப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை இமாச்சல் பிரதேச போக்குவரத்து துறை அவர்களுக்கு எண்களை ஒதுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், “இப்போது நாங்கள் ஏலத்தை நிறுத்தியுள்ளோம். ஏலதாரர்கள் குறிப்பிடப்பட்ட தொகையில் குறைந்தபட்சம் 30% டெபாசிட் செய்ய வேண்டும். அப்போது தான் எங்களால் அவர்களுக்கு எண்களை ஒதுக்கீடு செய்ய முடியும்” என்றார். தற்போது அங்குள்ள விதிமுறைகளின்படி, ஏலம் எடுக்கும் முன்பு யாரும் எந்தவொரு தொகையையும் டெபாசிட் செய்ய தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.