அரியலூரில் நகர்புற ஊரமைப்பு உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் 1 கிலோ தங்கம், 8 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.8 லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தன்ராஜ் என்பவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர்புற ஊரமைப்பு உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை அரியலூரில் உள்ள அவரது வீடு, கல்யாண மண்டபம், ஒடக்கார தெருவில் உள்ள இல்லம், பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கூத்தூரில் உள்ள வீடுகள் உட்பட மொத்தம் 6 இடங்களில் 40 லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து டிஎஸ்பி சந்திரசேகரிடம் கேட்டபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக கூறினார். இதையடுத்து, சுமார் 12 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் 1 கிலோ தங்கம், 8 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.8 லட்சம் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.