சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”உலகளவில் கர்ப்பிணிகளில் கர்ப்பகால நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் சதவீதம் 7 முதல் 10 ஆகும். தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 9.25 லட்சம் கர்ப்பிணிகள் உள்ளனர். இவர்களில் 70,000 முதல் 1,00,000 பேர் வரை நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகின்றனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள நிகழ்வாக நீரிழிவு நோய் மருத்துவ நிபுணர்கள் போன்ற மருத்துவ வல்லுநர்களுடன் கர்ப்பக் கால நீரிழிவு நோய் பற்றிய புதிய வழிகாட்டி நெறிமுறைகள் உள்ளடக்கிய புத்தகம் மருத்துவர்களின் வசதிக்காக தற்சமயம் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அனைவரும் இதனை தெரிந்து கொள்ளும் வகையில் தமிழில் விரைவில் வெளியிடப்படும். புதிய வைரஸ் தாக்குதல் தமிழகத்தில் இதுவரை இல்லை. என்றாலும், மழைக்கால நோய்கள் என்கின்ற வகையில் இன்புளூயன்சா, டெங்கு, மலேரியா போன்ற பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. இத்தகைய நோய் பாதிப்புகளை தடுப்பதற்கு வாரந்தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
கொசு பெருக்கத்தை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசு மருந்து அடிப்பது, புகை மருந்து அடிப்பது போன்ற அனைத்து பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் டெங்கு போன்ற நோய்கள் அதிகரிப்பதன் காரணம் நீர்த் தேக்கம் அதிகமாக இருப்பது தான்” என்று தெரிவித்தார்.