கேரளாவில் தனியார் மருத்துவமனையில் 24 வயதான சுகாதாரப் பணியாளர் ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக சமீபத்தில் இருவர் உயிரிழந்தனர். முதல் நபர் கடந்த மாதம் 30ம் தேதி உயிரிழந்தார். அவர் ஏற்கனவே கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததை அடுத்து, நோய் தீவிரமடைந்து உயிரிழந்ததாக கருதப்பட்டது. அதன் பின், கடந்த 11ம் தேதி மற்றொரு நபர் காய்ச்சலால் உயிரிழந்தார். அடுத்தடுத்து உயிரிழந்த இருவருக்கும் நிபா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததை தொடர்ந்து, இறந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மாதிரிகள், மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள தேசிய தொற்று நோயியல் நிறுவனத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
உயிரிழந்த இருவர் உட்பட நான்கு பேருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. கடந்த மாதம், 30ல் உயிரிழந்தவரின், 9 வயது மகன் மற்றும் 24 வயதான மைத்துனருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள, 9 வயது சிறுவனின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து, மாநில சட்டசபையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர், கண்காணிப்பு, தொடர்புகளை கண்டறிதல், அதிக ஆபத்து, குறைந்த ஆபத்து என அவற்றை வகைப்படுத்துதல், அவர்களை தனிமைப்படுத்தும் முகாம்களை அமைப்பது, கட்டுப்பாட்டு மண்டலங்களை வரையறுப்பது, சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை ஐ.சி.எம்.ஆர்., எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் இருந்து வாங்குவது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.
மேலும், கோழிக்கோட்டில் கண்டறியப்பட்டுள்ள வைரஸ் கிருமி, வங்கதேச வகையைச் சேர்ந்தது. இந்த வகை வைரசில் தொற்று குறைவாக இருந்தாலும், உயிரிழப்புகளை அதிகம் ஏற்படுத்தும். மனிதர்களுக்குள் வேகமாக பரவும் தன்மை உடையது. புனேவின் தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் குழு கேரளா வந்துள்ளது. இவர்கள் கோழிக்கோடு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நடமாடும் பரிசோதனை கூடத்தை அமைக்க உள்ளனர். இந்த பகுதியில் உள்ள வவ்வால்களிடையே ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் என்றும் அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறினார். செப்டம்பர் 24ஆம் தேதி வரை கோழிக்கோடு நகரில் மக்கள் கூடுவதைத் தவிர்க்குமாறு உத்தரவு பிறப்பிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
மேலும், இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் பணியாற்றும், 24 வயது சுகாதாரப் பணியாளருக்கு நிபா வைரஸ் நேற்றிரவு உறுதியாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.